“கலந்தாலோசனை அதிகப்படியான விழிப்புணர்வை அளிக்கிறது மற்றும் ஊகத்தை உறுதிப்படுத்துகிறது. இது ஒரு இருண்ட உலகில் வழிநடத்தும் மற்றும் வழிகாட்டும் ஒரு பிரகாசமான ஒளியாகும். எல்லாவற்றிற்கும் ஒரு பூரணத்துவ நிலை மற்றும் முதிர்ச்சி இருக்கிறது மேலும் அது தொடர்ந்து என்றென்றும் இருக்கும். புரிந்துணர்வு எனும் வெகுமதியின் முதிர்ச்சியானது கலந்தாலோசிப்பதன் மூலம் வெளிப்படுகிறது.“


பஹாவுல்லா

பஹாய் சமயத்தில் மதகுருமார்கள் இல்லை. அதன் விவகாரங்கள், இரகசிய வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர், மண்டல, தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் உள்ள அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. எந்தவொரு பிரச்சாரமும் இல்லாத ஒரு செயல்முறையின் மூலம் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையாளர்கள் தனிநபர்களாக எந்த அதிகாரத்தையும் கொண்டிருப்பதில்லை, ஆனால் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கும் அமைப்புகள் சட்டபூர்வ, நிர்வாக மற்றும் நீதி சார்ந்த அதிகாரத்தை செயல்படுத்துகின்றன. பஹாய் சமூக வாழ்க்கையின் உட்புற அம்சங்களை நிர்வகிப்பதற்கும், சமூகத்திற்கு ஆன்மீக மற்றும் லௌகீக வளங்களை வழங்குவதற்கும் இந்த நிறுவனங்கள் பொறுப்பாகின்றன.

பஹாய் நிர்வாக அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும் இந்த நிறுவனங்கள் கலந்தாலோசனை எனும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றன. இந்தக் கொள்கையின் படி, ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு விஷயத்தின் உண்மையையும் ஆராய்வதற்கான வழிமுறையாகக் கலந்துரையாடல்களை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களை நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் தனிப்பட்ட கண்ணோட்டங்களுடன் பற்றுக் கொள்ளாமல் மாறாக மெய்மை குறித்த ஒரு அகண்ட நோக்கை அடைவதற்காக மற்றவர்களின் கண்ணோட்டங்களை ஒரு வழிமுறையாகக் கருதி கற்றுக் கொள்ள முற்படுகிறார்கள். கையாளுதல், பாரபட்சம் மற்றும் ஒருவரின் தனிப்பட்ட எண்ணங்களை அல்லது விருப்பங்களைத் திணிக்கும் மற்ற வழிமுறைகள் இதன் மூலம் தவிர்க்கப்படுகிறன.